Thursday, April 2, 2015

கட உபநிஷதம்


 
மரணத்திற்குப்பிறகு மனிதனின் நிலை: 20-22

இந்த உபநிஷதத்தின் மையக்கருவான மரணத்திற்குப் பிறகு மனிதனின் நிலை பற்றிய உபதேசம் இங்கிருந்து தொடங்குகிறது

மரணத்திற்குப் பிறகு மனிதன் வாழ்கிறான் என்று சிலரும், இல்லை என்று சிலரும் கூறுகின்றனர். இந்தச் சந்தேகத்தை உன்னிடம் கேட்டுத் தெளிவுபெற விரும்புகிறேன். நான் கேட்க விரும்பும் மூன்றாவது வரம் இதுவே

எமதர்மனின் பதில்

நசிகேதா! இந்த விஷயத்தில் தேவர்களுக்கும்கூட சந்தேகம் உள்ளது. இந்த விஷயம் மிகவும் நுண்மையானது; எளிதாக அறியக்கூடியதல்ல. எனவே வேறு வரம் கேட்டுக்கொள். என்னைக் கட்டாயப்படுத்தாதே, விட்டுவிடு

நசிகேதனின் பதில்

இந்த விஷயத்தில் தேவர்களுக்கும் சந்தேகம் உள்ளதா! எமதர்மனே! இதனை எளிதாக அறிய முடியாது என்று நீயும் சொல்கிறாய். ஆனால் இதை உபதேசிப்பதற்கு உன்னைப்போல் வேறொருவர் கிடைக்க மாட்டார். வேறு எந்த வரமும் இதற்கு இணையாகவும் ஆகாது.

நசிகேதனைத் திசைதிருப்ப எமதர்மனின் முயற்சி : 23-25

நூறாண்டு ஆயுள் உள்ள மகன்களையும் பேரன்களையும் கேள். ஏராளம் பசுக்கள், யானை, பொன், குதிரை போன்றவற்றைக் கேள். பூமியில் பரந்த அரசைக் கேள். நீயும் எவ்வளவு விரும்புகிறாயோ அதுவரை வாழ்ந்துகொள்

நசிகேதா! இதற்கு இணையான வரம் என்று நீ எதையாவது கருதினால் அதைக் கேள். செல்வம், நீண்ட ஆயுள், பரந்த பூமியில் அதிபதியாக வாழ்க்கை என்று எதை வேண்டுமானாலும் கேள். உன்னை எல்லா ஆசைகளையும்  அனுபவிப்பவனாகச் செய்கிறேன்

நசிகேதா! மானிட உலகில் அடைதற்கரிய ஆசைகள் எவையெவை உண்டோ அவை அனைத்தையும் உன் விருப்பம்போல் கேட்டுக்கொள் சாரதிகளுடன் தேர்களைத் தருகிறேன். வாத்தியக் கலைஞர்களைத் தருகிறேன். ஆண்களை மயக்குகின்ற இந்த தேவலோகப் பெண்களைத் தருகிறேன். இத்தகைய பெண்கள் மனிதர்களுக்குக் கிடைக்கக் கூடியவர்கள் அல்லவே! நான் தருகின்ற இவர்களால் நீ வேண்டிய பணிவிடை பெற்றுக்கொள். ஆனால் மரணத்தைப்பற்றி மட்டுமே கேட்காதே.

நசிகேதனின் ஆசையின்மை

மரணதேவனே! நீ கூறுகின்ற இன்பங்கள் அனைத்தும் நிலையற்றவை அவை மனிதனுடைய புலன்கள் அனைத்தின் ஆற்றலையும் வீணாக்குகின்றன. வாழ்க்கையோ குறுகியது. எனவே நீ சொன்ன குதிரைகள், ஆடல்கள், பாடல்கள் எல்லாம் உன்னிடமே இருக்கட்டும்.

உலகின் இன்பங்கள் நிலையற்றவை. அதாவது உலகப் பொருட்களிலிருந்து கிடைக்கும் இன்பம் நிலையாக இருக்காது. அந்த இன்பங்களைத் தொடர்ந்து எப்போதும் துன்பங்கள் வரும். அது மட்டுமல்ல, இன்பங்களை அனுபவிக்க அனுபவிக்க அது ஆற்றலை விரயம் செய்து புலன்களை அழிக்கின்றன. நம்மையும் அழித்து, துன்பங்களையும் விளைவாகக் கொண்டுவருகின்ற இந்த உலக இன்பங்களை நாடக் கூடாது. மனிதனின் ஆயுள் மிகவும் குறுகிறது. இறைவன் தந்துள்ள இந்தக் குறுகிய ஆயுளை அற்ப சுகங்களில் செலவிடக்கூடாது; உயர் லட்சியத்தை அடைவதற்காகவே பயன்படுத்த வேண்டும். இதனைப் புரிந்துகொண்டு, எமதர்மன் அளித்த சுகபோகங்களை மறுத்துவிட்டான் நசிகேதன்

மனிதன் பணத்தால் திருப்தி அடையக்கூடியவன் அல்ல. உன்னை பார்த்ததால் வேண்டிய செல்வம் பெறுவது உறுதி. நீ ஆளும்வரை என் ஆயுளுக்கும் பஞ்சமில்லை. எனவே ஆயுளோ செல்வமோ எதுவும் எனக்கு வேண்டாம். நான் கேட்கத் தக்க வரம் அது ஒன்றே.

பத்து ரூபாய் கிடைத்தால் நூறு போதும் என்று தோன்றும் நூறு கிடைத்தால் ஆயிரம் சரி என்று தோன்றும். இவ்வாறு வளர்ந்துகொண்டே செல்வது பணத்தின்மீது உள்ள ஆசை என்று எழுதுகிறார் கேரளத்தில் வாழ்ந்த மகானான பூந்தானம். அதனால்தான் ஆசையை ஒரு சங்கிலி (நிகளம்) என்று குறிப்பிட்டார் அருணகிரி நாதர்( ஆசா நிகளம் துகளாயின பின் பேசா அனுபூதி பிறந்ததுவே), பணம் என்று மட்டுமல்ல, உலக இன்பங்கள் எதிலும் திருப்தி என்பது வராது. எமதர்மன் கொடுத்த அத்தனை செல்வத்தை அனுபவித்தாலும் விளைவு ஒன்றாகத்தான் இருக்கும்; அதாவது திருப்தி கிடைக்கப்போவதில்லை. எனவே அதை நாடிப் பலனில்லை,

புண்ணிய பாவங்களுக்கு ஏற்ப ஒருவரது ஆயுளை நிர்ணயிப்பவன் எமதர்மன். வேண்டிய காலம் வரை வாழ்வதற்கான வரத்தை நசிகேதனுக்கு அவனே அளித்துள்ளான். ஆனாலும் அந்தக் காலம் முடிந்தபின் இறக்கத்தான் வேண்டும். எனவே நீண்ட ஆயுளாலும் பலன் இல்லை. அதனால், மரணத்தைப்பற்றி தான் கேட்டதற்கு விடை வேண்டும், அது மட்டுமே வேண்டும் என்று சாதிக்கிறான் நசிகேதன்.

மூப்பற்றவர்களும் மரணமற்றவர்களுமான உங்களை அடைந்து உண்மையை அறிந்துகொண்டேன். நானோ; மூப்பும் மரணமும் உள்ள கீழ் உலகில் வசிப்பவன்; பாடல், உடல்சுகம் முதலியவற்றால் உண்டாகும் இன்பம் என்ன என்பதைச் சிந்தித்து அறிந்தவன். எனவே எவ்வளவுதான் நீண்ட ஆயுள் தந்தாலும் அந்த வாழ்க்கையில் நான் ஆசை வைப்பேனா?

மரண தேவனே! எந்த விஷயத்தில் இந்தச் சந்தேகம் நிலவுகிறதோ, மறுஉலக விஷயத்தைப் பற்றிய எதனை அறிந்தால் பெரும் பலன் கிடைக்குமோ, எந்த உண்மை மிக ரகசியமாக வைக்கப்பட்டுள்ளதோ அதை நான் தெரிந்துகொள்ள வேண்டும். வேறு எந்த வரமும் எனக்கு வேண்டாம்

உபநிஷதமும் அதன் தேடல்களும்

.

Renjith Kumar