Sunday, August 14, 2011

முருக பெருமானும் இந்து மத தத்துவமும்

.
இந்து மதம் தன்னுள் பல்வேறு தத்துவப் புதையல்களை ஒளித்து வைத்திருக்கிறது. மிகச் சரியாக அந்தப் புதையல்களைக் கண்டெடுத்தவர்களைதான் நாம் ஞானிகள் என்று கொண்டாடி வருகிறோம். அற்புதமான சிந்தனைகளை செறிவுமிக்க தத்துவங்களை சாதாரண மக்களும் புரிந்துகொள்வதற்காகவே அவை கதை வடிவில் சொல்லப்பட்டன. பழம் கிடைக்காமல் போன சாதாரண விஷயத்திற்கு யாராவது கோபப்படுவார்களா? என்ன சொல்கிறது சேவற்கொடியோன் கதை? ஞானம் அடைதலின் இரண்டு வழிகளை அந்த நிகழ்வு அடையாளம் காட்டுகிறது. அம்மையும் அப்பனும் இருக்கின்ற இடம் விட்டு நகராது. பிரம்மச்சரியம் காத்து இறையோடு இணைந்து நிற்றல் பிள்ளையார் வழி. உலக விஷயங்களில் உழன்று, உலக விஷயங்களைச் சுற்றி வந்து அனுபவித்து, பின் இறைத்தேடலில் ஞானம் கேட்டு வரும்போது ஒரு மெல்லிய பிணக்கு அங்கே வருகிறது. இது இப்போது உனக்கு வேண்டாம். உள்ளே விஷயக் குவியல் இருக்கிறது. தனியே ஓடு. குன்று தேடி நில். உற்று உற்று உள்ளே பார்த்து அவற்றிலிருந்து விலகி நில். தவம் செய். நீ ஞானத்தைத் தேடி எங்கேயும் ஓடவேண்டியதில்லை. அந்தப் பழம் ஞானப் பழம் நீயே. நீயே அதுவாகி மலர்ந்து நிற்பாய் என்பது தான் முருகக் கடவுளின் கோபம் கூறும் செய்தி. சரி; அந்த அறுபடை நாயகன் இரு தாரம் கொண்டிருக்கிறாரே இதற்கென்ன பொருள்? தெய்வானை இந்திரனின் மகள்; தேவ அம்சம்; வானவர் உறவு; உயர்ந்த நிலையை அளிக்கும் தத்துவம். வள்ளி என்பது பூமியின் உறவு. சாதாரணருக்கும் தெய்வ சங்கமம் கிடைக்கும் நிகழ்வு. கடவுள் தன்மையை உயர் யோக நிலையை மட்டுமல்ல; இவ்வுலக வாழ்க்கைத் தேவையான பலத்தையும் யோகத்தை மட்டுமல்லாது, போகத்தையும் அளிப்பவராக இருக்கிறார் கந்தக் கடவுள். விண்ணுலகம் செல்லும் வீடுபேற்றை மட்டுமல்ல; மண்ணுலக இன்பங்களையும் அளிக்க வல்லவர் வள்ளிமணாளன். இதை உணர்த்தும் தத்துவமே இருதாரமோடு நிற்கும் நிலை.

தீயவர்களை அசுரர்களை அழித்ததற்கான பரிசாக முருகனுக்கு தெய்வானை கிடைத்தார். தீய குணங்களை அழிக்க அழிக்க தேவநிலை துணைவரும் என்ற செய்தி அதில் ஒளிந்துள்ளது. ஆனால், மண்ணில் வாழ பொருள் வசதி பெருக கஷ்டப்பட வேண்டும்; முயற்சி செய்ய வேண்டும். அதற்கு இறையின் துணையும் வேண்டும். முயற்சியும் இறைத்துணையும் அருகிருந்து போராட வெற்றி கிடைக்கிறது. உலகியல் வாழ்வுக்கான வெற்றியைத் தருபவள் வள்ளி. வள்ளி என்பதன் சூட்சுமம் இதுதான். வள்ளி என்பது இவ்வுலக வெற்றி. தெய்வானை என்பது அவ்வுலக வெற்றி. இரண்டையும் அடைந்து, இரண்டையும் தருபவர் வேலவர். சரி; சேவற்கொடி எதற்கு? இவ்வுலக மாந்தர் விழிக்க குரல் கொடுக்கும் பறவை சேவல். விடியலைக் கொண்டாட அழைப்பு விடும் பறவை. உள்ளே உன்னித்து தியானநிலை அடையாது வெறுமனே உறங்குகின்ற மனிதர்களை, எழுந்திருங்கள் எழுந்திருங்கள்; எழுந்து உள்ளே விழிப்படையுங்கள் என்று அழைக்கும் விதமாக சேவற்கொடி. பாம்பும் மயிலும் வேலும் என்ன சொல்கின்றன? உள்பொங்கும் சக்தியின் விழிப்பு நிலை பாம்பு. யோகவழி பயணிக்க பயணிக்க முகம் பொலிவுறும் சிறப்பைக் கூற மயில். தவிர, ஆசன வகைகளில் ஒன்றான மயூராசனத்தின் சிறப்பையும் அது உணர்த்துவதாக உள்ளது. மயூராசனம் என்பது கைகளின் வழியே உடலைத் தாங்கும் நிலை. இந்த ஆசனம் உள்ளுறுப்புகளை பலப்படுத்துவதோடு, குண்டலினி சக்தி விழிப்படையவும் உதவியாக இருக்கிறது. குண்டலினி விழிப்பால் தன்னைப் பற்றி அறிவு மிகைப்படுகிறது. தன்னைப் பற்றிய கவனம் அதிகமாகிறது. செயல்களில் தெளிவும் பேச்சில் நிதானமும் ஏற்படும். மயிலாசனத்தின் செய்தி இதுவே.

எப்போதும்... எப்போதும் உன்னுள்ளே தீயவை அகற்றும் பணியைச் செய்து கொண்டிருக்க சத்தியம் எனும் வேலைத் துணையாக வைத்திரு எனும் செய்தி சரவணகுமரனின் வேல் உணர்த்திக்கொண்டே இருக்கிறது. அவரின் படைவீடுகள் அமைந்திருப்பது அசுரரை அழிக்க மட்டுமல்ல; திசைதோறும் நின்று பக்தர்களைத் துரத்தும் துன்பங்களை நீக்கவும்தான். இந்த ஆறு படை வீடுகளை முழுமையான இறைநினைப்போடு தரிசித்தவர்கள் முருகக்கடவுளின் அருள் நிரம்பப் பெற்று வீடுபேறு அடைவார்கள்; விதியினை வெல்வார்கள்; காலத்தை ஊடுருவும் கலைகள் எல்லாம் கைவரப் பெறுவார்கள். மூலாதாரம், ஸ்வாதிஷ்டானம், மணிப்பூரகம், அனாகதம், விசுக்தி, ஆக்ஞா என்னும் ஆறு சக்கரங்களின் இருப்பை தன்னுள் தரிசித்து, ஏழாவதாய் இருக்கும் சகஸ்ரார சக்கரத்தைத் தொடுவார்கள். வேலவன் பிரணவ மந்திரத்தின் பொருள் உணர்த்தும் தேவன். ஓமென்று உள் நின்ற உத்தமர்க்கெல்லாம் ஓடி வந்து உடன் உதவிடும் நாதன். வேண்டி நிற்பது எதுவாயினும் விரைந்து கொடுக்கும் முமரக்கடவுள். அபயம் என்றே அவனை நம்பி அனுதினமும் ஆறெழுத்தை ஜெபிப்போர்க்கு அன்பனாய் நண்பனாய் வந்து நன்றாய் அருளிடும் அறுமுகத்தான். எண்ண எண்ண இன்னும் ஏராளம் உண்டு நம் அழகனின் பெருமைகள். இவை உணராமல் வாதம் செய்து பிறவிகள் வளர்ப்போரை பிணி கண்டு தவிப்போரை விட்டுத் தள்ளுவோம். இந்து மதம் கூறும் இனிய தத்துவங்களை அதன் ஆழங்களை சூட்சுமங்களை சிந்திக்கத் தலைப்படுவோம். வானத்தை பூமியை நட்சத்திரங்களை கோள்களை இப்பெரிய பிரபஞ்சத்தை இன்னும் உயிர்ப்போடு வைத்திருக்கும் மகத்தான சக்தியை ஏதேனும் ஒரு பெயரில் நித்தம் நித்தம் வணங்கி நின்றிடுவோம்.

Thanks : Dinamalar
 
Regards
P Renjith Kumar

No comments: