Sunday, February 19, 2012

மகா சிவராத்திரி

20/02/2012


இன்று "மஹா சிவராத்திரி"



சைவ சமயத்தின் முழு முதற் கடவுளான சிவபெருமானுக்குரிய விரதங்களுள் மிகவும் சிறப்புவாய்ந்த விரதம் சிவராத்திரி ஆகும். இதன் சிறப்புக் கருதி இவ்விரதத்தை மகா சிவராத்திரி என்றும் அழைப்பதுண்டு.

இஃது மாசி மாதத்து கிருஷ்ண பட்ச சதுர்த்தசியில் இடம்பெறும். இப் புண்ணிய தினத்திலே உபவாசமிருத்தல், சிவாலய தரிசனம் செய்தல், சிவ தோத்திரங்கள் பாடல், சிவ மந்திரங்கள் செபித்தல், இரவு சிவ சிந்தனையுடன் கண் விழித்தல் ஆகிய கருமங்களைச் சிரத்தையோடு செய்தல் மிகப் புண்ணியம் வாய்ந்ததாகும்.


இவ்விரதத்தை சிவாலயத்தில் அனுஷ்டித்தல் சாலச் சிறந்ததாகும். இயலõதவர்கள், இல்லத்திலே புனிதமான முறையில் அநுட்டிக்கலாம்; ஆனால் அன்றைய தினம் சிவாலய தரிசனம் செய்தாக வேண்டும். பகல் முழுவதும்

உண்ணாவிரதமிருந்து பின் இரவு முழுவதும் கண்விழித்து நான்கு யாமப் பூசைகளையும் சிவாலயத்திலே தரிசித்தல் வேண்டற்பாலது. சிவராத்திரியின் போது மூர்த்திக்கு அபிடேகம் செய்தல், வில்வத்தால்அர்ச்சித்தல், வேதம் ஓதுதல், சிவ புராணங்கள் படித்தல் பயன் சொல்லல், ஆகியனவும் மிகுந்த நற்பலன்கள் அளிக்கும். சிவராத்திரியன்று நித்திரை விழிக்கும் போது அப்பொழுதை ஆத்மீக முறையில் சிவ வழிபாட்டிலேயே கழித்தல் வேண்டும். கேளிக்கைகளில் இத்தவப் பொழுதைக் கழித்தலைத் தவிர்த்தல் அவசியம். சிவராத்திரி சிவ சிந்தனையிலே கழிக்கப்பட வேண்டும்.


சிவராத்திரியன்று இரவு 14 நாழிகைக்கு மேல் உள்ள முகூர்த்தம் இலிங்கோற்பவ காலம் எனப்படும். சிவ இராத்திரி முழுவதும் நித்திரை விழிக்க இயலாதவர்கள் இலிங்கோற்பவ முகூர்த்தம் முடியும் வரை தன்னும் நித்திரை விழித்தல் நன்று.


சிவராத்திரி வகைகள்

நித்திய சிவராத்திரி,

பட்ச சிவராத்திரி,

மாத சிவராத்திரி,

யோக சிவராத்திரி,

மகா சிவராத்திரி

என 5 வகைப்படும்.


மாசி மாதம் கிருஷ்ண சதுர்த்தசியில் நள்ளிரவில் சிவபிரான் இலிங்கத்தில் தோன்றினார். இத்தினமே மகா சிவராத்திரியாகும். இத்தினத்தில் சிவ பூசை செய்து சிவ புண்ணியம் பெறலாம். சிவன் அபிடேகப்பிரியராதலால் இரவு நான்கு யாமமும் இலிங்கோற்ப மூர்த்திக்கு நல்லெண்ணெய், பால், தயிர், நெய், தேன், பஞ்சாமிர்தம் கருப்பஞ்சாறு, இளநீர் ஆகியவற்றால் நான்கு யாமமும் அபிடேகம் செய்து அர்ச்சித்தல் முறையாகும்.

விரதமனுட்டிப்போர் அதிகாலை துயிலெழுந்து தூய நீராடி இல்லத்தில் சிவ வணக்கம் செய்த பின் சிவாலயம் சென்று தரிசித்தல் வேண்டும். அன்று முழுவதும் உபவாசம் இருத்தல் மிகச் சிறப்பõகும். மாலையில் மீண்டும் சிவாலயம் சென்று இரவு நான்கு யாமமும் சிவதரிசனத்தில் ஈடுபட்டு அபிஷேக அர்ச்சனை பூசைகள் கண்டு களித்து மறுநாட் காலை சூரியன் உதிப்பதற்கு 6 நாழிகைக்கு முன் பாரணை செய்ய வேண்டும். அந் நேரத்தில் அந்தணர் ஏழைகளுக்கு தானம் செய்தலும் உகந்ததாகும்.


சிவலிங்கத்தில் சிவன், விஷ்ணு, பிரமன் ஆகிய மும்மூர்த்திகளுமே அடங்கியுள்ளனர். சிவலிங்கத்தின் பீடம் ஆவுடையார் எனப்படும். இஃது சக்தியின் ரூபம். பாணம் சிவரூபம், பீடம் கிரியாசக்தி வடிவம், இலிங்கம் ஞான சக்தி வடிவம், பீடத்தின் அடிப்பாகம் பிரம்ம ரூபம், நடுப்பாகம் விஷ்ணு பாகம், இக் கருத்தை பின்வரும் பாடல் மூலம் திரு மூலர் விளக்கியுள்ளார்.

பாடல்

"மலர்ந்த அயன்மால் உருத்திரன் மகேசன் பலம் தரு ஐம்முகன் பரவிந்து நாதம் நலம் தரும் சக்தி சிவன் வடிவாகிப் பலம் தரு லிங்கம் பரா நந்தியாமே "


சிவ இரவில் இடம்பெறும் நான்கு யாமப் பூசை முறைகள் பற்றி நோக்குவோம்.

முதலாம் யாமம்
முதலாம் யாமத்தில் பால், தயிர், நெய், கோமயம் கோசலம் ஆகியவை கலந்த பஞ்ச கவ்வியத்தால் இலிங்கோற்பவ மூர்த்தியை அபிடேகம் செய்து பின்னர் வில்வம் தாமரை ஆகியவற்றால் மூர்த்தியை அர்ச்சித்தல் வேண்டும். நிவேதிக்க வேண்டியது பயத்தம் பருப்பு, ஓத வேண்டியது யசுர் வேதம்.


இரண்டாம் யாமம்
இரண்டாம் யாமத்தில் பஞ்சாமிர்தத்தால் மூர்த்தியை அபிடேகித்த பின் சந்தனம் தாமரை சாற்றி துளசியால் அர்ச்சித்து பாயாசம் நிவேகித்து யசுர்வேதம் ஓத வேண்டும்.


மூன்றாம் யாமம்
மூன்றாம் யாமத்தின் போது மூர்த்திக்கு தேனால் அபிஷேகம் செய்து கற்பூரம் சாதி முல்லை மலர்கள், சாற்றி முக்கிளை வில்வத்தால் அர்ச்சித்து எள் அன்னம் நிவேதித்து சாம வேதம் ஓதி வழிபாடு செய்ய வேண்டும்.

நான்காம் யாமம்
நான்காம் யாமத்தில் கருப்பஞ்சாற்றினால் சுவாமியை அர்சித்து அரைத்த குங்குமப்பூ, நந்தியாவட்டை மலர் சாற்றி, நீலோற்பவ மலரால் அர்ச்சித்து சுத்த அன்னம் நிவேதித்து மூர்த்தியை வழிபட வேண்டும். ஓத வேண்டியது அதர்வேதம்.

பின்னணி
சிவராத்திரியின் பின்னணியில் உள்ள சம்பவங்கள் பலவற்றுள் ஒன்றை நோக்குவோம். ஒருகால் பிரம்மனுக்கும் விஷ்ணுவுக்குமிடையே தாமே பரம் பொருள் என்ற கர்வம் ஏற்பட்டது. இவர்களது அறியாமையை நீக்க சிவபெருமான் திருவுளங் கொண்டு தான் ஒரு மாசி மாத அபர பக்கத்தில் சதுர்த்தசியில் பெரியதோர் சோதிப் பிழம்பாக பிரம்ம விஷ்ணுக்கள் முன் தோன்றி இச்சோதியின் அடி முடியை எவர் காண்கின்றாரோ அவரே உண்மை பரம் பொருள் என அசரீரி மொழிந்தார்.

அசரீரி வாக்குக் கேட்ட அவர்கள் பிரம்மன் அன்னப்பட்சி வடிவமெடுத்து சோதிப் பிழம்பான நுனியைத் தேடி மேல் நோக்கிப் பறக்கலானார். விஷ்ணு பன்றி வடிவமெடுத்து சோதியின் அடியைத் தேடிப் பூமியைக் குடைந்த வண்ணம் கீழே செல்லலானார். ஆனால் இருவருமே தமது முயற்சியில் வெற்றியடையவில்லை. விஷ்ணு தனது தோல்வியை ஒப்புக் கொண்டார். ஆனால் பிரம்மனோ தான் சோதிப் பிழம்பின் முடியை கண்டதாகவும் தனது கூற்றை நிரூபிக்க தாழம் பூவை சாட்சி கூறவும் வைத்தார். பொய்யுரைத்த பிரம்மனுக்கு பூவுலகில் ஆலயங்கள் அமைக்கப்படமாட்டா, என்றும் பொய்சாட்சி கூறிய தாழம்பூ சிவ பூசைக்கு தவிர்க்கப்பட வேண்டும் என்றும் சிவபிரான் சாபமிட்டார். தமது அறியாமையும் அகந்தையும் ஒழிந்து சிவனே பரம்பொருள் என்னும் உண்மையை அவர்கள் உணர்ந்தனர். சோதிப் பிழம்பு மலையாக இறுகி, சிவனார் இலிங்க வடிவில் காட்சி தந்தார். இந்த வகையில் சிவ முக்கியத்துவம் பெற்ற சிவராத்திரி விரதத்தை சைவ சமயிகள் யாவரும் முறைப்படி அனுஷ்டித்து எல்லாம் வல்ல ஈசன் இன்னருள் பெற்றுய்ய வேண்டும்.



தென்னாடுயை சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி



ஓம் நமசிவாய! ஓம் சிவாய நமஹ!
ஓம் சிவ சிவ ஓம் சிவ சிவ


Palaniswamy Renjith Kumar

நன்றி :
vivekanandan.blogspot.com
http://vivekaanandan.blogspot.com/2011/11/blog-post_27.html
ramanas.wordpress.com

No comments: