Monday, June 28, 2010

பகவத் கீதை- சிறு குறிப்புகள் - 1

.
பகவத் கீதை என்பது இந்து சமயத்தினரின் முக்கிய நூல்களுள் ஒன்றாகும். மகாபாரதத்தில் நடைபெறும் குருச்சேத்திரப் போர் தொடங்கும் முன் எதிரணியை ஒருமுறை பார்வையிட்ட அர்ஜூனன் அங்கே தன் உறவினர்கள், நண்பர்கள், ஆசிரியர்கள் போன்றோர் இருப்பதால் போரிட மறுத்தான். இதைக் கண்ட அவன் தேரோட்டியான கிருஷ்ணர், தர்மத்திற்காக போரிடும் பொழுது உறவுமுறைகள் குறுக்கிடக்கூடாது என்றார். மேலும் அப்போது அவனுடன் தத்துவங்கள், யோகங்கள் போன்றவை பற்றியும் உரையாடினார். இந்த உரையாடலே பகவத் கீதை ஆனது.


அர்ச்சுனனின் மதிக்கலக்கம்


18 அட்சௌகிணி சேனைகளும் போருக்கு ஆயத்த நிலையில் நிற்கும்போது பேடிபோல் பின்வாங்குகிறான் அர்ச்சுனன். எந்தப் போருக்காக பல ஆண்டுகளாக வானுலகம் வரை சென்று ஆயத்தம் செய்திருந்தானோ, எந்தப் போரை எதிர்பார்த்து தன் கோபத்தையும் துக்கத்தையும் கட்டுப்படுத்தி வைத்திருந்தானோ, அந்தப் போர் இதோ சங்கு ஊதவேண்டிய தருவாயில் போர் தொடங்கும் நிலையில் இருந்தபோது, கடைசித் தருணத்தில் அம்பையும் வில்லையும் கீழே எறிந்துவிட்டு ‘இந்தப்போர் எனக்கு வேண்டாம், மலர்களால் அர்ச்சிக்க வேண்டிய என் குருமார்களையும், மூத்தோர்களையும் அம்புகளால் அடிக்க மாட்டேன்’ என்று வாதம் பேசுகிறான் அர்ச்சுனன். அவனுடன் நீண்ட நேரம் வேதாந்தம் பேசி, பக்தியின் நெளிவு சுளுவுகளை அலசி, சுயதருமம் என்ற கடமைக்குப் பொருள் கூறி, அவனுடைய அறியாமையைப் போக்குகிறார் கண்ணன். முடிவில், ‘கண்ணா, உன் சொற்படி செய்கிறேன்’ என்று அர்ச்சுனன் போருக்கு ஒப்புக்கொள்கிறான், என்பதுடன் 18வது அத்தியாயத்தில் கீதை முடிகின்றது.

கண்ணனின் ஐந்து வாதங்கள்


அப்படி கண்ணன் என்ன சொல்லி அவனுக்குப் புரிய வைத்தார் என்பதுதான் கீதை. அர்ச்சுனனின் ஐயமென்ற சிடுக்கை அவிழ்த்து விடுவதற்காக் கண்ணன் எடுத்தாளும் வாதங்கள் ஐந்து. ஒவ்வொரு வாதமும் ஒரு குறிப்பிட்ட கோணத்திலிருந்து பார்க்கும் பார்வையோ அல்லது ஒரு குறிப்பிட்ட மனப்போக்கினால் ஏற்றுக்கொள்ளும் போர்வையையோ அடித்தளமாகக் கொண்டது. அவ்வைந்தாவன:

===============================================================
1.வேதாந்தப்பார்வை


2.சுயதருமப் பார்வை


3.கருமயோகப் பார்வை


4.எல்லாம் அவன் செயல் என்ற பக்திப்போர்வை


5.அவனும் செயலாளியல்ல, பிரகிருதி தான் செய்கிறது என்ற  
   தத்துவப்போர்வை
================================================================

இந்த ஐந்து வாதங்கள் பற்றி மிகவும் விரிவாக இனி வரும் பகுதியில் பார்ப்போம்.


--- தொடரும்
.

No comments: