Tuesday, October 5, 2010

பிரதோஷம் - 4

.
முடிவுரை
 
சிவபெருமானுக்கு உகந்த விரதங்களில் பிரதோஷமும் ஒன்று. பிரதோஷ வழிபாடு சகல சௌபாக்கியங்களையும் தர வல்லது. குழந்தை இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும். திருமணமாகாத கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும். வறுமை நீங்கி செல்வம் பெருகும். நோய்கள் நீங்கும் . எடுத்துக் கொண்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும்.

ஒவ்வொரு மாதமும் வளர்பிறையில் ஒரு பிரதோஷமும் தேய்பிறையில் ஒரு பிரதோஷமுமாக மாதமிருமுறை பிரதோஷம் வரும். பிரதோஷம் என்பது ஏழரை நாழிகை மட்டும்தான். திரயோதசி நாளில் சூரியன் மறையும் மாலை வேளையில் சூரியன் மறைவதற்கு முன்பு உள்ள மூன்றே முக்கால் நாழிகையும், மறைந்த பின்பு உள்ள மூன்றே முக்கால் நாழிகையும், அதாவது மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை பிரதோஷ காலமாகும்.

பொதுவாக வளர்பிறையிலோ, தேய்பிறையிலோ, மாலை வேளையில் திரயோதசி வந்தால் அது மஹாபிரதோஷம் ஆகும். அதுவே சனிக்கிழமைகளில் வந்தால் அது சனிப் பிரதோஷமாகும்.

தேவர்களின் துன்பம் போக்க நஞ்சை உண்ட சிவபெருமான், அனைத்து உயிர்களும் துன்பம் நீங்கி இன்புற்று வாழ கயிலாய மலையில் பிரதோஷ காலத்தில்தான் நந்திதேவரின் இரு கொம்புகளுக்கிடையில் திருநடனமாடி மகிழ்வித்தார். அதனால் பிரதோஷ காலத்தில் தவறாமல் சிவாலயத்திற்குச் சென்று நந்தி தேவருக்கு சிறப்பு வழிபாடு செய்து சிவபெருமானை நந்தியின் இரு கொம்புகளுக்கிடையில் நடமாடும் கோலத்தில் வழிபடுதல் சிறப்பு.

ஆகவே, பிரதோஷ தினத்தன்று பிரதோஷ வேளையாகிய மாலை 4.00 மணி முதல் 6.00 மணி வரை சிவாலயத்தில் வழிபடும்போது சோம சூக்த பிரதட்சணம் செய்வது விஷேச பலனைத் தரும்.

சிவாலயத்தில் நந்தி பெருமானிடமிருந்து புறப்பட்டு, இடப்புறமாகச் சென்று சண்டிகேசுவரரை வணங்கி, அங்கிருந்து வந்த வழியே திரும்பி வந்து, நந்திதேவரை வணங்கி, வலப்புறமாக கோமுகி வரை வந்து, மீண்டும் வந்த வழியே திரும்பி நந்திதேவரின் கொம்புகளுக்கிடையே சிவபெருமானை வணங்க வேண்டும். இப்படி மூன்று முறை வணங்கும் முறைக்கு சோம சூக்த பிரதட்சணம் என்று பெயர்.

இந்த சோம சூக்த பிரதட்சணம் செய்வதால் ஒரு வருடத்திற்கு ஆலயம் சென்று இறைவனை வழிபாடு செய்த பலனும், சனிப் பிரதோஷ தினத்தில் இந்த சோம சூக்த பிரதட்சணம் செய்தால் ஐந்து வருடத்திற்கு ஆலயம் சென்று இறைவனை வழிபாடு செய்த பலனும் கிடைக்கும் என்கிறார்கள்.

ஓம் நமச்சிவாய


By
P Renjith Kumar

1 comment:

P Renjith Kumar said...

ஓம் நமச்சிவாய