Wednesday, December 17, 2014

திருவெம்பாவை பாடல் - 2 (திருவண்ணாமலையில் அருளியது)


திருவெம்பாவை பாடல் - 2

பாசம் பரஞ்சோதிக்கு என்பாய் இராப்பகல் நாம்
பேசும்போது எப்போ(தும்) இப்போதார் அமளிக்கே
நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்
சீசி இவையுஞ் சிலவோ விளையாடி
ஏசுமிடம் ஈதோ விண்ணோர்கள் ஏத்துதற்குக்
கூசும் மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும்
தேசன் சிவலோகன் தில்லைச் சிற்றம்பலத்துள்
ஈசனார்க்கு அன்பார் யாம் ஆரேலோர் எம்பாவாய். 2


தோழியர்: இரவு பகலெல்லாம் - நாம் பேசும் பொழுதெல்லாம்,
"எனது பிணைப்பு (பாசம்) பரஞ்சோதியான சிவபெருமானிடம்" என்று சொல்வாய்.
ஆனால் இந்த மலர் நிறைந்த படுக்கையின் மேல் தான் உன் விருப்பத்தை
உண்மையில் வைத்தாயோ ?
படுத்திருப்பவள்: சீ சீ ! இப்படியா பேசுவது ?
தோழியர்: இதுவா விளையாடுவதற்கும் பழிப்பதற்கும் இடம் ?
(அதன் பெருமையைக் கண்டும் தம் கீழ்மை கண்டும் நாணி)
விண்ணவர்களும் வணங்கக் கூசுகின்ற மலர் போன்ற பாதங்களை
நமக்குத் தந்தருள் செய்ய வரும் ஒளியே உருவான, சிவலோகனான,
தில்லைச் சிற்றம்பலத்து இறைவனுக்கு அன்பு எங்கே ! நாம் எங்கே !
போது - மலர்; அமளி - படுக்கை; தேசன் - ஒளியுருவன்

Thanks:
http://www.shaivam.org/siddhanta/thivempalli_t.htm

Regards
P Renjith Kumar


No comments: