Monday, December 15, 2014

திருப்பாவை பாசுரம் - 1

.
இன்று மார்கழி முதல் நாள் ...முப்பது பாசுரமும் ஒவ்வொன்றாக முப்பது நாளில் இங்கு பதிவு செய்யப்படும் 

ஓம் நமோ நாராயணா ...

 
திருப்பாவை முதல் பாடல்


 

 
 
முதல் பாடல்

ஆயர்பாடிக் கன்னிகைகளில் சீலர் மற்றைக் கன்னிமார்களை
நோன்பு நோற்க அழைப்பது......


மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்;
நீராடப் போதுவீர் ! போதுமினோ, நேரிழையீர் ! 
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள் !
கூர்வேல் - கொடுந்தொழிலன் நந்தகோ பன்குமரன்;
ஏரார்த்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்,
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்
நாரா யணனே, நமக்கே பறைதருவான்,
பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய்

விளக்கம்
ஆய்ப்பாடிச் சிறுமிகளே ! ஸ்ரீமத் நாராயணனாகிய கண்ணனே நமது நோன்புக்கு வேண்டியவற்றைத் தருவான், நமக்கே விருப்பத்தை நிறைவேற்றச் சித்தமாயிருக்கின்றான். இந்த மார்கழித் திங்களில் மதிநிறைந்த இந்நாள் நன்னாளாக வய்த்திருக்கின்றது.

கண்ணன் அருள்பெறத் தக்க காலம் இதுவென்று மாதத்தையும் பட்சத்தையும் நாளையும் கொண்டாடுகிறார்கள். ஒருவரையொருவர்முகங்கண்டு களிக்கவும், எல்லோரும் சேர்ந்து சென்று கண்ணனைத் துயில் உணர்த்தவும் மதிநிறைந்த இந்நாள் நன்னாளாக வய்த்திருக்கின்றது.

தாபம் தீர நீராட வருங்கள் என்ற அழைப்பிலே, கண்ணனைப் பிரிந்திருந்த தாபம் தீர அவனுடைய அன்பையும் அருளையும் பெறுவோம் என்பது குறிப்பு. " வருகிறவர்கள் எல்லோரும் வரலாம் " என்று சொல்வது போல் அமைந்திருக்கின்றது ' போதுவீர் ! போதுமினோ ' என்ற அழைப்பு.
பால், நெய் முதலியனவற்றில் சிறப்புமட்டுமல்ல ஆய்ப்பாடியின் சீர், கண்ணன் வளரும் நீர்மையும் சீர்மையும் தனிப்பெருஞ்சிறப்பல்லவா ?இங்குள்ள செல்வச் சிறுமியர் ஸ்ரீ கிருஷ்ண கடாட்சமாகிய அன்புச் செல்வத்திற்கு உரியவர்.

பசும்புல்லும் சாக மிதியாத பரமசாதுவாகிய நந்தகோபர், பிள்ளைமீதுள்ள பேரன்பினால் ' என்ன ஆபத்து வருகிறதோ ? ' என்று வேலைச் சாணைபிடித்துக் ' கொடுந்தொழிலுக்கும் ' சித்தமாகிறார். யசோதையோ அந்த அழகிய பிள்ளையை மாறாதே பார்த்துக் கொண்டிருக்கையிலே, தன் அழகிய கண்களில் மேன்மேலும் ஆழகு நிறைந்து குடிகொண்டிருக்கும் பேறு பெறுகின்றாளாம்.

சகல தாபங்களும் ஆறும்படியான வடிவழகைக் ' கார்மேனி ' என்றும், காதலாகிக் கசிந்து குளிர நோக்குகின்ற கண்களைச் " செங்கண் " என்றும். குறிப்பிடுகிறார்கள். தேஜசும் குளிர்ச்சியும் ஒருங்கே அமைந்த திருமுக மண்டலத்தைக் " கதிர்மதியம்போல் முகம் " என்று வருணிக்கிறார்கள்.
நோன்புக்கு வேண்டிய வாத்தியங்களில் ஒன்று ' பறை ' , இது வியாஜம், நோக்கம் கண்ணனோடு உறவுகொண்டு அவனுக்கே பணி செய்வது.நீராடுவதையும் வியாஜமாகக் கொண்டு கண்ணனைத் தானே அடைய விரும்புகிறார்கள்.

" பார் " உலகத்தின் ஒரு சிறு பகுதியாகிய ஆயர்பாடியயையும் குறிக்கும். கண்ணனுடன் தோழமை கூடாதென்று தடுத்திருந்த ஆயர்குல முதியவர்களே புகழும்படி கண்ணனே உபசரணங்களை உதவப் பெண்கள் நோன்பில் இறங்குகிறார்கள்.

Source and Thanks: Sriram-Krishnaswamy (FB)

ப ரஞ்சித் குமார்

No comments: